Labels

Sunday, September 4, 2011

திறப்பு விழா நடைபெற்று 8 மாதங்களுக்கு பிறகு திருச்சி தகவல் தொழில் நுட்ப பூங்கா செயல்பட தொடங்கியது

Source: Daily Thanthi

முதலாவதாக திறக்கப்பட்ட நிறுவனத்தில் திருச்சி பகுதியினருக்கு வேலைவாய்ப்பு

திருச்சி,செப்.4திறப்பு விழா நடைபெற்ற 8 மாத காலத்திற்கு பின்னர் திருச்சி தகவல் தொழில்நுட்ப பூங்கா செயல்பட தொடங்கி உள்ளது. முதலாவதாக திறக்கப்பட்ட நிறுவனத்தில் திருச்சி பகுதியினருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி ஐ.டி. பார்க்

திருச்சி அருகே உள்ள நவல்பட்டு என்ற இடத்தில் தமிழக அரசின் மின்னணு நிறுவனம் (எல்காட்) சார்பில் தகவல் தொழில் நுட்ப பூங்கா (ஐ.டி.பார்க்) அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தகவல் தொழில் நுட்ப பூங்காவில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த தகவல் தொழில் நுட்ப பூங்காவை கடந்த 9/12/2010 அன்று திறக்கப்பட்டது.

அமைச்சர் ஆய்வு
அன்றைய தினமே இங்கு தொழில்களை தொடங்க 9 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் விழா மேடையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆணைகளும் வெளியிடப்பட்டது. ஆனால் திறப்பு விழா கண்டு பல மாதங்கள் ஆன பின்னரும் ஐ.டி பார்க் நிர்வாக அலுவலக கட்டிடம் பெயரளவில் மட்டுமே இருந்து வந்தது. எந்த சாப்ட்வேர் நிறுவனமும் தொழில் தொடங்க முன்வரவில்லை. இதற்கிடையில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு அமைந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் உதயகுமார் திருச்சி ஐ.டி பார்க்கிற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் உடனடியாக தகவல் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் தொழில் தொடங்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

முதல் நிறுவனம் வந்தது
இந்நிலையில் நவல்பட்டு தகவல் தொழில் நுட்ப பூங்காவில் முதலாவதாக ஒரு சாப்ட்வேர் நிறுவனம் நேற்று திறக்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்திற்கு சென்னையிலும் அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனத்தின் திருச்சி அலுவலகத்தில் சுமார் 50 இளம் பொறியியல் பட்டதாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று வளாக தேர்வு நடத்தி அவர்களை தேர்வு செய்து உள்ளனர்.

வரவேற்பு
திருச்சி தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு விழா கண்டு 8 மாதங்களுக்கு பின்னர் இப்போது முதல் நிறுவனம் தனது பணியை தொடங்கி உள்ளது.
திருச்சி பகுதியை சேர்ந்தவர்களுக்கே இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது திருச்சி பகுதியை சேர்ந்த மாணவ& மாணவிகள், கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.