திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் அருகேயுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்குச் செல்லும் நூறு அடிச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் குண்டூர் அருகே தொடங்கும் இந்தச் சாலை, தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான பிரதான சாலையாக விளங்குகிறது.
மேலும், தகவல் தொழில்நுட்பப் பூங்காவைச் சுற்றியுள்ள துப்பாக்கி தொழில்சாலை, நவல்பட்டு, அண்ணாநகர், போலீஸ் காலனி, காந்தலூர், எலந்தப்பட்டி, பழங்கானங்குடி, பூலாங்குடி, சூரியூர் உள்ளிட்ட பகுதி மக்கள், திருச்சிக்கு எளிதாகச் சென்று வர இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். பயண நேரம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.
இந்த நூறு அடிச் சாலையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது, அங்குள்ள உப்பாறு வாரியில் நீர்வரத்து செல்ல வழியில்லாமல், நவல்பட்டு, அண்ணாநகர், போலீஸ் காலனி, பர்மா காலனி, சிலோன் காலனி போன்ற பகுதிகளை வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் நூறு அடிச் சாலையில் பெரிய பள்ளத்தைத் தோண்டினர். அதன்பிறகு, இந்தச் சாலை சீரமைக்கப்படவேயில்லை. இதனால், மிகவும் பழுதடைந்த இந்தச் சாலையை இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் எச்சரிக்கையோடு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சாலையைப் பயன்படுத்தி வந்த மக்கள் துப்பாக்கி தொழில்சாலை வழியாக மாத்தூர் ரவுண்டானா சென்று அங்கிருந்து திருச்சி சென்று வருகின்றனர். இதனால், பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம் விரயமாகிறது.
இதுதொடர்பாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.என். சேகரன், பல முறை கோரிக்கை விடுத்தும், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அலுவலகம் செல்வோர், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இந்தச் சாலையை, தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவுள்ள இந்த நேரத்திலாவது சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Source: Dinamani
No comments:
Post a Comment