Labels

Saturday, October 24, 2009

குவைத்தை தொடர்ந்து சார்ஜா விமானமும் ரத்து: ஐ.டி. பூங்காவுக்கு பாதிப்பு?

Source: Dinamani

திருச்சி, அக். 23: திருச்சியிலிருந்து இயக்கப்பட்டு வந்த குவைத் விமானத்தைத் தொடர்ந்து, தற்போது சார்ஜா விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான சேவை ஒவ்வொன்றாகக் குறைக்கப்பட்டு வருவதால், திருச்சியில் தொடங்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் வளர்ச்சியும் கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவில் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக உள்ள திருச்சி விமான நிலையத்தில் இருந்து தற்போது துபை, அபுதாபி, கொழும்பு (இலங்கைத் தலைநகர்), கோலாலம்பூர் (மலேசியத் தலைநகர்), சிங்கப்பூர், சார்ஜா ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு விமானச் சேவையாக சென்னை, திருவனந்தபுரத்துக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

எனவே, திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், கடந்த 2002 - 03 ஆம் ஆண்டில் 93,810 (உள்நாடு - 22,897; வெளிநாடு - 70913) என்றிருந்த பயணிகள் வருகை எண்ணிக்கை 2007 - 08 ஆம் ஆண்டில் 4,58,551 (உள்நாடு 1,09,397; வெளிநாடு 3,49,154) ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல, கடந்த 2002 - 03 ஆம் ஆண்டில் 1680 (உள்நாடு 623; வெளிநாடு 1,057) என்றிருந்த விமான சேவைகளின் எண்ணிக்கையும் 2008 - 09 ஆம் ஆண்டில் 6.064 (உள்நாடு 2,731; வெளிநாடு 3,334) ஆக அதிகரித்துள்ளது. வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்த விமான நிலையத்தில் தற்போது சேவைகளின் எண்ணிக்கை ஒவ்வொன்றாகக் குறைத்து கொண்டிருப்பதால், பின்னடைவைச் சந்திக்கும் நிலை உருவாகும் என்ற அதிருப்தியும் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. நல்ல வரவேற்பு இருந்த திருச்சி - குவைத் விமான சேவை கடந்த 2007 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அக். 26-ம் தேதி முதல் சென்னை - திருச்சி - திருவனந்தபுரம் - சார்ஜா விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த விமானம் ரத்து செய்யப்படுவதால், திருச்சியிலிருந்து சார்ஜாவுக்கு செல்வதற்கான நேரடிச் சேவை தடைபடுவதுடன், திருவனந்தபுரத்துக்கான விமான சேவையும் பாதிக்கப்படுகிறது. மேலும், திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்லும் விமானங்களில் ஒரு சேவையும் ரத்தாகிறது.

ஏற்கெனவே, உள்நாடு விமானச் சேவையான திருச்சி - பெங்களூர் விமானமும் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

ஆனால், திருச்சி மற்றும் சுற்றுப்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். சார்ஜா விமான சேவை ரத்தால் இந்த மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, இந்தப் பின்னடைவு செயற்கையாக ஏற்படுத்தப்படுவதாகவும், மதுரை விமான நிலையத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

பயணிகளுக்குப் பாதிப்பு உள்ளதைப் போல, திருச்சியில் அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் வளர்ச்சிக்கு இது தடையாக இருக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதான தேவையே உள்நாட்டு விமான சேவைதான். ஏற்கெனவே, உள்நாட்டு விமான சேவையின் எண்ணிக்கை போதிய அளவில் இல்லாததால்தான் திருச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைவதும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், ஓரிரு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் 7 சிறு நிறுவனங்களை நம்பி திருச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு, உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டிய இந்தச் சூழ்நிலையில், தற்போது குறைத்துக் கொண்டிருப்பதால், திருச்சி தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் வளர்ச்சியும் கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, இந்த பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே வளைகுடா நாடுகளில் வாழும் திருச்சி, சுற்றுப்புற மாவட்ட மக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment